அவளின் மெளன மொழி

முன்னுரை


காதல் என்பது ஒரு கலை. அது கற்பனைக்கும் கனவிற்கும் இடையிலான ஒரு நுட்பமான பாலமாகும். இந்த கவிதை என் அன்பின் உணர்ச்சிகளின் ஒரு பிரதிபலிப்பு. காதலின் தேடலும் ஏக்கமும், உற்சாகமும் தாங்கிய இந்த வரிகள் என் மனதின் அழகிய ஓவியமாக சித்தரிக்கின்றன.  

உயிரின் மூச்சாக, இதயத்தின் துடிப்பாக நான் உணரும் அந்த ஒருவருக்காக எழுதப்பட்ட இந்தக் கவிதை, ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மறைந்திருக்கும் காதலின் தீவிரமான உணர்வுகளை எழுப்பும் என நம்புகிறேன்.  

இது என் கனவுகளின் நாயகனுக்கான ஓர் அன்பின் அஞ்சலி!  



கவிதை : அவளின் மெளன மொழி



என்
கனவுகளின் நாயகன்
என்
அன்பின் அரசன்
என்
இளமையின் போர்வாள்

என்
இரவுகளின் இளவரசன்
என்
மெத்தையின் மெய்யாழன்
என்
ஆனந்த கண்ணீரின் அழகன்

என்
உயிர் மூச்சின் பித்தாளன்
என்
அழகை தீட்டும் கலைஞன்
என்
ஆயுளை அதிகரிக்கும் அன்பாலன்

என்
உவமையின் ஓவியன்
என்
சித்திரத்தின் சிநேகிதன்
என்
பார்வையின் கொடிவாள் வீரன்

என்
தேகத்தின் சாயல் தீரன்
என்
புன்னகையின் சித்தன்
என்
ஆளுமையின் அன்பாளன்

ரோமங்கள் யாவும்
தீச்சூட்டும் தீச்சுடர் சூரியன்
குளிர்ந்த நீருக்கு 
வெப்பம் ஊட்டும் பகலவன்

வற்றிய நதிக்கு
மழைநீர் சுகம் தருமோ
வாடிய என் வாழ்வுக்கு
காதல் சுகம் தருமோ

வாடிய பூவும்
அவன் பார்வை பட்டதும் நீர்வீழ்ச்சியில்
நனைகிறது

அங்கும் இங்கும் நீர்த்துளிகளில்
றெக்கை விரித்து பறக்கிறது.

மோகத்தை
கூட்டும்
வெப்ப சலனத்தை
அவன் பார்வை மூலம் கடத்துகிறான்
அவன்
காந்த ஒத்ததிர்வு ஓசையிலே
நித்தமும் மிதக்க கிடக்கிறேன்
அந்த ஒரு நொடி
நாழிகையை மிச்சம் இன்றி தீர்க்க தவிக்கிறேன்

பரிசுத்தாமான
பாசத்தின் மறு உறவே
உன் சட்டையின் வாசனை 
என் மூச்சு காற்றை பாடாய் படுத்துதடா

ஆசை
ஒருபுறம் வழிய
இரவுகள்
மறுபுறம் நெழிய
தனிமையோடு தள்ளாடும்
வாழ்வை தந்த பிரம்மா
இது நியாயம் தானா?

எப்போது
நீ வருவாய்
ஏங்கி தவிக்குதடா
எம்மனசு
அழகு தோட்டமும்
காத்து கிடக்குதடா

அங்கும் இங்கும்
உனக்காக பூத்து குலுங்கும் பூக்களைப்பார்
செந்தேனை வழிய விடும் மடல்களை பார்

அழகிய நீர் வீழ்ச்சியில்
அசைந்து வரும் உன் நினைவுகளை பார்
சுட்ட மண் குளிர் சூடும்
சுகம் நீ தருவாயா?

என் கைபிடித்த கணவரே
என் ஆசை தீரா கணவனே
கட்டிய மனைவி காத்து கிடக்கிறேன்
கதவுகள் மூடி தவமாய் கிடக்கிறேன்

மூடுபனி இருட்டுனிலே
வெளிச்சம் பீச்சும்
மினுக்கெட்டாம் பூச்சி போல
என் உள்ளத்தில் படர்ந்து
என் மன கதவை திறந்து
எனக்கு நீ வெளிச்சம் தருவாயா

என் இளமைக்கு
மகுடம் சூட்ட வருவாயா

இப்படிக்கு
உங்கள் ஏக்கத்துடன்
உங்கள் மனைவி
கவிதையாழினி.

No comments:

Powered by Blogger.