
Introduction: இந்த பதிவில் அழகிய கவிதைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்
Admin_Siva
July 20, 2024
கவிதை: கணவன் மனைவி வாழ்க்கை கவிதை
கணவன் மனைவி உறவு
ஆயிரம் வலி
என் மனதில் இருந்தாலும்
என் மனைவி மட்டுமே என் ஆறுதல்
மீசை இல்லாத கோவக்காரி
படக்குனு கோவம் வரும்
அது கூடவே அவள் பாசம் வரும்
என்னை நம்பி வந்தவள்
எனக்காய் சகித்துக்கொண்டு
என்னோடு வாழ்ந்து வருகிறாள்
ரொம்ப கஷ்டம் எங்கள் வாழ்க்கையில்
ஆனாலும் அவள் ஆறுதல் தான் இன்றும் நகரும் படகுக்கு துடுப்பு போல் நகர்த்தி கொண்டு செல்கிறது
ரொம்ப அழகானவள்
பார்க்க அந்த நிலவு போல் இருப்பாள்
என்மீது ஆசைக்கொண்டு வந்து இப்போது வயல் காட்டில் சூரியன் அவளை சுடும் போது எல்லாம் நான் கருகி கொண்டு இருக்கிறேன்.
என்னால் தானே அவளுக்கு இந்த நிலை என்று.
நாங்கள் இருவரும் படித்தவர்கள் தான்
பாலப்போன உலகம் படுத்தும் பாடு
நித்தம் பைத்தியம் பிடிக்க வைத்து இப்போது எங்கள் வாழ்க்கையில் வைத்தியம் மட்டுமே முழு நேர பணி ஆகிவிட்டது.
ஏனோ தெரியவில்லை
ஏன் ஓடுகிறோம் என்று கூட புரியவில்லை
நாங்கள் இருவரும்
ஒரு டம்ளர் அரிசியில் ஒருநாள் வாழ நிம்மதியாக உணவு கிடைத்து விடுகிறது.
பிறகு ஏன் இந்த ஓட்டம்.
ஓடி கலைத்து
இருவரும் அமர்ந்து பேசிய பொழுது
எங்கள் வாழ்க்கையில் பொழுது விடிந்தது.
எது தேவை என்பதே
அப்போது தான் புரிந்து கொண்டோம்
விவசாயம் செய்யாமல்
கிடந்த எங்கள் பூமி எங்களை சொர்க்கத்தில் கொண்டு சேர்ப்பதாக அழைத்தது.
நான் சிறுவயதில்
புழுதி பறக்க தவழ்ந்து உருண்ட இடம்
சேறும் சகதியும்
மூச்சை கிழித்து மனதில் இன்பத்தை சுரக்கும் இடம்
பாட்டி எல்லாம் நாட்டுப்புற பாடல்கள் பாடிய இடம்
பலரின் வாழ்வை மனசார சுமந்த மண்.
ஏனோ
இப்போது நாதியற்று கிடக்கிறது .
நினைவுகள் வராமல் இருக்குமா
என் கண்ணே கலங்கிய நீரில் நினைவு மிதக்கிறது.
தாத்துனும் பூட்டனும்
ஏறு ஓட்டிய மண்
அம்அம்மா அப்பாத்தா
வெத்திலை பாக்கு போட்டு
உள்ளாசமாய் சில பல கதைகள்
பேசிய மண்
பயிரான தானியங்கள்
செழித்து வளர்ந்த மண்
இன்னும் பல நினைவுகளை
சுமந்து நிற்கிறது
எங்கள் மண்
இம்மண்ணில் பிறந்து வளர்ந்து
இம்மண்ணை விட்டு மாத சம்பளம் தேடி ஓடிய குற்றம்.
என் உடம்பு எல்லாம்
பல வியாதி.
யோசித்து முடிக்கும் முன்
என் மனைவி என்னங்க
மடையில் தண்ணீர் திறந்து விடுங்கள்
தக்காளி செடி வாடுது என்று கூற
நானே என்னவள் வாடுவதை எண்ணி வாடிப்போனேன்.
- சோழநாட்டுகவிஞர்
No comments: